Monday, February 20, 2012

ராசக்கா

ராசக்கா

ராசக்கா சந்தைக்கு புறப்பட்டுச்சுன்னா கூடவே ஓடியாந்திருவேன். அக்கா திட்ட திட்ட அது முன்ன நடுந்துகிட்டே இருப்பேன். எலேய் பொறுப்பத்தப் பயலே! உன்ற அப்பனாத்தாட்ட சொல்லி புட்டு வாரான்னு கத்தும். நான் கேட்காத மாதிரியே முன்ன நடப்பேன். அதுவே என்ர அப்பன் ஆத்தாக்கு குரல் கொடுக்கும் ஒரு நமிட்டு சிரிப்போட.

ராசக்கா தலையில ஒரு கூடை தக்காளியும் இடுப்பில ஒரு கூடை வெண்டை கத்திரி அள்ளிகிட்டு இரண்டு கிலோமீட்டர் டவுனு பஸ்சுக்கு நடக்கும். எலேய்! உன்ற மாமன் வந்தா ஒத்தாசையாய் இருந்திருக்கும், எடுப்பெடுத்தவனே உன்னை எப்பிடி டே நான் கவனிப்பது. வ்யாவாரத்தை யாருலே பார்ப்பதுன்னு திட்டும்.

டவுன் பஸ் கண்டக்டர் இடம் கூடை வைக்கிறதுக்கு திட்டு வாங்கும், சின்னப் புள்ளைக்கு என்ன டிக்கெட்டு வேண்டி கிடக்குன்னு சொல்லி இன்னும் வெறுப்பேத்தும். என்னால ஒரு உதவியும் இல்லைன்னாலும் அக்காக்கு ஒரு தெரிஞ்சப் பய உடனிருப்பதை எதோ ஒரு பாதுகாப்புன்னு நினைக்கும்.

ராசக்கா ஒரு ஆம்பிளை கணக்கா விறு விறுன்னு பஸ்சு மேல ஏறி கூடையை ஏத்திரும். இறக்கும் போது யாராவது ஆம்பிளை கிடைக்குமான்னு பார்க்கும். லேட் ஆச்சுன்னா பஸ்காரன் கிட்ட திட்டு வாங்கும். சந்தை வாசலில தரகு மேஸ்திரி ஆளுக இருக்கும். ஆனா உதவாது. அக்கா அவிங்க குறைஞ்ச விலைக்கு கேட்கிராக எங்கும். மேஸ்திரி ஆளு அவிங்க கூடையை முதல்ல இறக்கிய பிறகுதான் அக்காவோட கூடையை இறக்க விடும். ஓரிரு தடவை அக்காவே எடுத்து வந்துச்சு.

ஆனால், தரகு மேஸ்திரி ஆளு பேச்சும் பார்வையும் சரியில்லாததால, பக்கத்து கடை சொர்ணக்கா புருஷனை நாடும். சொர்ணக்கா மிரட்டி சொன்னதால சொர்ணக்கா புருஷன் உடந்தையா இருக்கும். தரக முறைச்சிக்கிட்டா எப்பிடி புள்ள வியாவாரம் நடக்கும்ங்கும். ஒவ்வொரு தடவையும் என்னாத்துக்குப் பொல்லாப்புன்னு தரகுக்கு வணக்கம் சொல்லிப்புட்டு போயிரும்.

ராசக்கா ஒரு தடவை நல்ல செழுப்பா கூடை நிறைய தக்காளி எடுத்து வந்துச்சு. தரகு பஸ் கிட்டயே நிப்பாட்டி இருபது ரூபாய்க்கு கூடையை கொடுத்து விட்டுப் போயிருன்னு மிரட்டுச்சு.அக்கா நல்லா சண்டை போட்டுச்சு. முடியாதுன்னு விறுவிறுன்னு வந்து சொர்ணக்கா கடை பக்கத்திலேயே கடை விரிச்சிகிச்சு.

சொர்ணக்கா தரகப் பகைச்சிக்காத புள்ளன்னு சொல்லிச்சு. இருபது ரூபாய்க்கு கொடுக்க இது என்ன சொத்த தக்காளியா ன்னு சொர்ணக்கவோட கூடையை ஒரு பார்வை பார்த்துச்சு. சொர்ணக்கா ஒன்னும் சொல்லாம தன வ்யாவாரத்தப் பார்க்க ஆரம்பிச்சிருச்சு.

ராசக்கா கடையை அடுக்கிற விதமே அழகாயிருக்கும். லாவகமா தக்காளி அடுக்கும். கூறு கூறா வெண்டை கத்திரி தனியா அடுக்கி வைக்கும். சில ஆளுங்க அக்காவை லுக் விட்டுகிட்டே காயெல்லாம் வாங்கிட்டுப் போயிருவானுக. அப்பிடியும் கடைசியில கொஞ்சம் தங்கிரும்.

மாலை மங்குற நேரத்தில காய் தக்காளி நிறைய தங்கிருச்சுன்னா அக்கா முகம் கறுப்பிலும் கொஞ்சம் மங்கிப் போயிரும். திருப்பி பஸ் கட்டணம் கொடுக்கணும். காலி கூடைக்கு காசு கிடையாது. ஆனா அக்காக்கு காயை மலிசா கொடுக்க மனசு வராது. தரகு கேலி பேசும். இல்லாட்டி இரண்டு ரூபாய்க்கு தா ங்கும்.

ஒரு தடவை பேசாம கொடுத்துட்டு வாயேன்க்கான்னேன். எலேய்! பொறுப்பத்தவனே! வீட்டுல ஒரு சொட்டு வைக்காம அள்ளிட்டு வந்திருக்கேன். நானும் மாமனும் சாப்பிடலாம் அல்லது உங்கப்பன் ஆத்தாக்கு கொடுக்கலாம்லே! மீதியைப் பக்கத்து ஊரு பெரிய சனம் வீட்டுக்கே போய் வித்துட்டு வரலாம்லே ன்னுச்சு.

திரும்பி வரும் போது ராசக்காவைப் பார்க்க பெருமையா இருந்துச்சு. மெதுவா கையப் பிடிச்சு நடந்தேன். அக்காவோட சுரசுரப்பான கை கூட சுகமா இருந்துச்சு. அக்கா அழகா ஒரு புன்முறுவலோட கூட வந்துது.

11 comments:

துளசி கோபால் said...

'சல்'ன்னு நடை:-)

பழமைபேசி said...

Rasakka Raja Nadai!!

ஓலை said...

நன்றிங்க :-)

சம்பத்குமார் said...

அன்பின் நண்பரே..உங்களது இந்த வலைத்தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
வலைச்சரத்தில் கவிதை சரம்

ஓலை said...

@சம்பத்குமார் நன்றிங்க|

இராஜராஜேஸ்வரி said...

அழகா ஒரு புன்முறுவலோடு அருமையான நடை.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

rajamelaiyur said...

அழகான கதை ..

rajamelaiyur said...

இன்று

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

ஓலை said...

@ராஜராஜேஸ்வரி நன்றிங்க.
@ராஜா நன்றிங்க

ஈரோடு கதிர் said...

கலக்கல்! :)

ஓலை said...

ஆஹா மேயரே வாங்க வாங்க.