Sunday, February 19, 2012

மல்லி மேடு சந்தை

மல்லி மேடு சந்தை

குப்பண்ணன் மல்லி மேடு வரும் போதெல்லாம் முண்டாசு கொஞ்சம் பெருசா இறுக்கக் கட்டி வருவாரு! சுத்தியுள்ள சனம் தன்னை உத்துப் பாத்திறக்கூடாதுன்னு நெனப்பு. சந்தை சனம் இதை அறியாததல்ல. இருப்பினும் காமிச்சுக்காது.

குப்பண்ணன் அல்லி அம்மாவோட எல்லை மாரியம்மன் கோவில் வாசல்ல வந்து உட்கார்ந்து ஐந்து வருஷம் ஆயிட்டுது. மாடசாமி அண்ணன் இவிங்களப் பார்த்து விட்டு தன் தோட்டத்தில வந்து வைச்சுக்கிச்சு. என்ன ஏதுன்னு கேட்கலை. எங்கிருந்து வந்ததுன்னு கேட்டு மனம் நோகிறும்மொன்னு தயக்கம். அதுவா சொல்லும்னு விட்டிருச்சு.

ஒதுங்கி வாழ நினைக்கும் குப்பண்ணன் மாடசாமி அண்ணன் கிட்ட அப்பிடி ஒரு கேள்வி வாரமாப் பார்த்துகிச்சு. தோட்டத்துல கிடைக்கும் காய் பழம், அப்பப்ப மாடசாமி அண்ணன் கொடுக்கும் அரிசி பருப்பு, அல்லது தோட்டத்து விளைச்சலை சந்தையில விற்கும் போது கொஞ்சம் தனக்கு வேண்டியதை வாங்கி வரும்.

அல்லியம்மா சொல்லி அழும் போது மட்டும் குடிசைக்கு வெளிய வந்து இன்னும் இந்த கட்ட வேக மாட்டேங்குதுன்னு தன்னைத் தானே நொந்துக்கும். அதுவும் அல்லியம்மா கண்ணுலப் படாமப் பார்த்துக்கும். அப்பிடி ஒன்னும் தப்பு தண்டா பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. ஆனால் நம்ம நிலைமை இப்பிடி ஆயிட்டதேன்னு நினைப்பு வரும் போது எல்லை மாரியம்மனைச் சுத்தியோ, வாய்க்கா கரைச் சுத்தி நீரின் சலன வளைவைப் பார்த்து நடக்கும்.

இந்த தடவ மல்லி மேடு சந்தைக்கு தானும் வரேன்னு மாடசாமி அண்ணன் சொல்லிப்புட்டுது. குப்பண்ணனுக்கு ஒரே கவலையாயிட்டுது. அண்ணன் நோவுற மாதிரி ஒன்றும் பண்ணலையே! என்ன ஆயிட்டுன்னு ஒரே கவலை.

மாடசாமி அண்ணன் சந்தைக்குப் போற முன்ன கலெக்டர் ஆபீசு பக்கம் இட்டுக்கிட்டுப் போச்சு. குப்பண்ணன் தயங்கி நின்னுருச்சு. வலிய தள்ளிக்கிட்டுப் போய் ஒரு விண்ணப்பத்தைப் கொடுத்து நிரப்பச் சொல்லியது. வேண்டாம்னேன்னு சொல்லிப் பார்த்தும் விடலை. குப்பண்ணன் கொடுத்த விண்ணப்பத்தைப் பார்த்த கலெக்டர் நேரா இரண்டு பேரையும் வலையூர் பட்டி கர்ணம் வீட்டுக்கு இட்டுகிட்டுப் போயிட்டார். குப்பண்ணன் தயங்கித் தயங்கி பின்ன வந்தார்.

கலெக்டர் தன் வீட்டு முன்ன நிற்பதைப் பார்த்த கர்ணம் குப்பண்ணன் கிட்ட ஒன்னும் பேசாம பத்திரத்தை கொடுத்து விட்டாப்பல. குப்பண்ணன் நன்றியுடன் கலெக்டர் க்கு வணக்கம் சொன்னாலும், மாடசாமி அண்ணனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சிருச்சேன்னு தயக்கம். மேலும் அவர்கிட்ட உண்மையை சொல்லாததன் குற்ற உணர்ச்சி அமைதியாகவே மல்லி மேட்டு சந்தை திரும்பினர் இருவரும்.

தோட்டத்துக்கு திரும்பின குப்பண்ணனுக்கு இன்னிக்கு குடிசை வித்யாசமாயிருந்தது. சோகமாவே இருக்கும் அல்லியம்மா வந்துட்டியலான்னுது. என்ன நடக்கு இன்னிக்குன்னு ஒன்னும் புரியல. சோறு வைச்சுகிட்டே அல்லியம்மா சொல்லியது இனி நாம வலையூர் பட்டி போயிறலாம என்று சொல்லிச்சு. அல்லியாம்மாக்கு எப்பிடி விவரம் தெரிந்திருக்கும்னு சொல்லிட்டிருக்கும் போதே கர்ணம் வீட்டுல வலுக்கட்டாயமா இருந்துகிட்டு வேலையாள பணி செய்த தனது கணக்குப்பிள்ளை சுந்தரவதனம் வந்து போனதைச் சொல்லிச்சு.

நாளைப் பொழுது வேறு மாதிரி இருக்கும்ன்னு நினைச்சு குப்பண்ணன் கடைசியா ஒரு முறை வாய்க்காக் கரை ஓரம் நடந்தார்.

2 comments:

பழமைபேசி said...

//புனைவு//

நம்ப முடியாது!

ஓலை said...

நம்பித்தான் ஆவணும். இதுக்காக எங்கப் போய் குப்பண்ணனைத் தேடுவது.

நன்றிங்க :-)