Tuesday, February 14, 2012

ஒரு நாள் பயணம்

ஒவ்வொரு தடவை இந்தியா போகும் முன் இந்த தடவை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா போய் வரணும்னு நினைப்போம். வெளிநாட்டில வாழும் போது மத்திய தர வர்க்கமாக வாழும் நாம், இந்தியாவில கால் வைக்கும் போது ஒரு முதலாளி அல்லது பண்ணையார் நினைப்போடு ஏர்போர்ட் லிருந்து வெளியேறுவோம். ஒரு நாள் விமானப் பயணம் எப்பிடி நமது மனநிலையை மாற்றுகிறது என்பது வியப்பே. இதனால பிரச்சனைஇல்லாம திரும்பனும் என்ற நினைப்பும் அதே ஒரு நாள் பயணத்தில மாறிரும்.

ஒரு நாள் பயணம் வீட்டை நோக்கி அடையும் போது வரவேற்க மலர்ந்த முகத்துடன் உற்றார் உறவினர் நிறைந்திருப்பர். ஆனால் திரும்பி வரும் போது வரவேற்க நமக்கு வீடு திரும்ப நாம் அழைத்தவர்கள் மட்டுமே இருப்பார்கள். இருந்தாலும் நம் மனநிலை இருவேறு நாடுகளில் இருவேறு விதமாவே இருக்கிறது.

நமது எதிர்பார்ப்புகள் தேவைகள் அந்தந்த நாடுகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றவாறு நாம் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டு பயணம் மேற்கொண்டால் இரு இடத்திலும் பிரச்சனையோ அல்லது அசௌகரியங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. எத்தனை பேரால் அவ்வாறு செய்ய முடிகிறது.

காரில்லாமல் அடுத்த இடம் நகர முடியாத வாழ்க்கையை அயல்நாடுகளில் பழக்கப் பட்டுள்ளோம்.ஆனால் இந்தியாவில் நாம் தங்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடாமல் செயல் பட நினைத்தால் எல்லோருக்கும் மனஸ்தாபத்துடன் விலக வேண்டிய நிலை ஏற்படும்.

பொதுவாக ஒரு இடத்திற்குப் போக வழி கேட்டால் சுலபமாக பஸ் அல்லது ரயில் ஒட்டி வழி சொல்லுவார்கள். அதைப் பின்பற்றினால் குறித்த நேரத்தில் செல்ல முடியும். ஆனால் நமக்குப் பழக்கப் பட்ட அல்லது தெரிந்த அயல் நாட்டு போக்கு வரத்து சாதனம் கார், விமானம், டாக்ஸி பற்றி பேச்சு வந்தால் நமக்கு கிடைக்கும் பார்வைகள் பேச்சுகள் மரியாதைகள் எல்லாம் நமது கேட்கும் முறை விதம் உட்பட்டு தான் கிடைக்கும்

இங்கு நாம் எப்பிடி போகிறோம், என்ன செய்யனும்னு கேட்பதற்கோ சொல்வதற்கோ நாதி கிடையாது. நாமே யாருக்காவது போன் பண்ணி சொல்லிக்கணும். ஆனால் இந்தியாவில் எப்பிடி பயணித்தாய், பஸ் இருக்கும் போது ஏன் ஆட்டோ, எதுக்கு இவ்வளவு பணம், என்பது போல ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டுமே சங்கடங்கள் தான். அவர்கள் சராசரியாய் ஆட்டோக்கும் டாக்டர்க்கும் கொடுப்பத்தை விட நாம் கொடுத்தாலோ கொடுக்க நேர்ந்தாலோ நம்மிடம் சொல்லத் தயங்க மாட்டார்கள். இங்கு நாமாக யார்கிட்டயாவது சொன்னாத் தானுண்டு.

பஸ் வழி சொல்கிறார்களே என்று பஸ்சில் ஏறி போய், அயல் நாட்டிலிருந்து வந்திருக்கும் நமக்கு உயர்தர ஹோட்டல் விருந்து தர நினைக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், அல்லது நமது பந்தாவால் ஆவலுடன் நம்மை எதிர் நோக்கி இருக்கும் நண்பனுக்கு நாம் ஏற்படுத்தும் சங்கடம், எல்லாம் கிளம்பும் முன் சொல்லி சமாளித்து இந்தியாவில் செயல்பட வேண்டும். இங்கு நீ சௌகரியமாய் வந்து சேர்ந்தையோ என்றோ அல்லது அவன் வந்து சேர அவன் பட்ட கஷ்டத்தையோ சொல்லி முடித்து விடுவார்கள்.

இது மாதிரி ஒரு பயணத்தில் ஆயிரம் விதமாய் நடக்கும். இருப்பினும் ஒரு நாள் பயணத்தில் நம் மனநிலையை வேறு விதத்தில் பயணிக்க விடாமல் ஒவ்வொரு நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப நம் பயணத்தை வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு நாள் எல்லோருக்கும் நல்ல நினைவுகளோடு தொடரக் கூடிய நாட்களாகட்டும்.