Sunday, April 22, 2018

குரங்கின் கையிலோர் மடிசார்

புரட்டி அடித்தால் புரோட்டா என்றார்கள்
புரட்டி அடித்தேன் துவைக்கும் துணியை
துணியைப் புரட்டியதில் கிழிந்தது புரோட்டா!

காணும் கண்டதைச் செய்வதறிந்து செய்தேன்
அதைப் புரட்டி எடுத்து கழுவியதுடன் நின்றது அறிவு
கற்றது மண்ணளவு கல்லாதது உலகளவு
கற்றது ஏட்டுச் சுரைக்காய் எனினும்
என்னறிவில் அதுவோர் இமயமலை!

புரட்டி எடுத்து மடிக்கும் மடிப்பை அறியேன்
மாமியின் மடிசாரில் மடிப்பை அறியேன்
அடித்துத் துவைக்கும் துணியின் மடிப்பில்
தானாய் மடித்து நிற்கும் மடிசார்!

குரங்கின் கையிலோர் மடிசார்!

கரைந்துண்ணும் போராட்டம்

வாழ்க்கை எனும் ஜீவ மரணப் போராட்டம்
விரட்டியடிக்கும் காக்கைக் கூட்டம்
தன் பிறவா குஞ்சினை
வாழவைக்கப் போராடும் கூட்டம்!

பருந்தின் கையிலோ மலரத்துடிக்கும் ஜீவன்
பிறந்தும் உலகம் காணமுடியா குருவிக்குஞ்சு!

இரையாடத் துடிக்கும் பருந்தை
அஞ்ச விரட்டும் காக்கை கூட்டம்
ஒன்றோ இரண்டோ அல்ல
தனியாய் எதிர்கொள்ளும் பருந்து!

இரைத்தேடலில் ஜீவமரணப் போராட்டங்கள்
பிறரது இழப்பில் தோன்றும் கடினங்கள்
கூடி வாழ எண்ணும் காக்கைகள்!

காக்கை கரைந்துண்ணும் உணவல்ல
காக்கை விரட்டலில் உண்ணும் உணவு
எளியவனை வலியவன் அழிக்கும் தேடல்!

காக்கையை கரைந்துண்ணும் போராட்டம்!

Tuesday, March 6, 2018

இருவாரம் தொலைதூரம்

இளவேனிற்காலம் நோக்கி
சிறகு விரிக்க காத்திருக்கும் பறவைகள்
இன்னும் இருவாரம் பனிக்காலமென
இயற்கை அழைத்துச் சொல்கையில்
குளிர்ந்த இறகுகள் சுருங்கி மடிந்தன!

உடலின் குளிர் உஷ்ணத்தை உலர்த்த நினைக்கையில்
இயற்கை சொல்லும் இருவாரம்
பலநாள் காத்திருப்பாய் குளிர்ந்து சுருங்கியது!

வட்டமிடும் பறவைகளை அண்ணாந்து பார்த்து
குஞ்சு பொரித்து காத்திருக்கும் கூடுகளிலிருந்து
விடுதலை பெறலாம் என நினைக்கையில்
இயற்கை சொல்கிறது இரு வாரம்!

காத்திருந்த பனிக்காலம் விரைவாய் கடந்தாலும்
இருவாரம் தொலைதூரமாய் நிற்கையில்
பறவை மனதின் எதிர்பார்ப்புடன்
கைநீட்டிப் பிடிக்க நினைக்கும் வசந்தகாலம்.

இருவாரம் தொலைதூரம்!

Saturday, March 3, 2018

கேப்போமா இனி

கேட்கக் கேட்க ஞானம் வரும்பாங்க
எனக்கு தூக்கம் வரும்ன்னா
கேப்போமா இனி!

கேட்டு கேட்டு எவனும் வந்துராதீக
கூண்டோட தூக்கிடுவோம்ன்னா
கேப்போமா இனி!

கேள்விகளே பறிக்கப்படும் இலையெனில்
இனி துளிர் விடும் இலைகளைக் களைவேனென்றால்
கேப்போமா இனி!

கேள்விகளே உலர்ந்த சருகானால்
மட்கிப் போன சருகுகள் உரமாகாதோ
கேப்போமா இனி!

கேள்வியில் வளரும் குட்டிப் பிஞ்சுகளை
வளர விடாத கேள்விகளாக்குமெனில்
கேப்போமா இனி!

மரத்திலுள்ள கேள்விகளாய் இலைகள்
அதில் மலர்ந்த பூக்கள் காய்களாகினவா என
கேப்போமா இனி!

Friday, March 2, 2018

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு

மனைவியின் மனதில் நிறைந்தவள்
மீளா தூக்கத்தில் மிதந்து விட்டாள்
மனைவியின் துக்கம் மாமியாரிடமும்
மாமியாரின் துக்கம் தனக்கு கொடுப்பினையில்லையென்று!

நண்பனின் துக்கம் மனதைத் தெளிக்கிறது
இளம் வயது மரணங்கள் மனதின் நெருடலில்
அவன் மனதிலோ எத்தனை பெண்கள்!

எல்லோர் மனதிலும் நிறைந்தவள்
விட்டுச் சென்ற கதாபாத்திரங்கள்
அசைபோடும் மனதில் ஓவியங்கள்!

எளிமையான பாத்திரங்களில் எளிமையாய் நின்றாள்
விட்டு சென்ற மனத்திவிலைகள்
எளிமையாய் கடக்க முடியாமல் நிற்கிறது!

வாழ்ந்து மறைந்தாள் மக்களின் மனசோடு!

மலர் வணக்கம்!

தஞ்சம் அடையா மான்

வில்லை வளைக்கலாம் முதுகு வளையாது
விடுபடும் அம்புக்கு இலக்கு தவறினாலும்
பாயுமிடம் தவறாது துளைக்குமிடம் ஒன்றே!

வேடனிடம் வேண்டி நிற்காது மான்
வலைவீசுபவனின் இலக்கு ஒன்றே என்றறியும்!
வில் அம்பு வேடன் வலைபற்றி யோசிக்காமல்
சுற்றியிருக்கும் அழகு சமவெளியில்
புல்லை தின்பதில் தன் வசீகரம் இழக்காது!

அவரவர் வேடத்தில் அனைவரும் கதாபாத்திரங்களே
அது வில் அம்பு வேடன் வலை மான் என தோன்றினாலும்!

தஞ்சம் அடையா மான்!

Friday, February 23, 2018

அயலவன் கொடுத்த மய்யம்

தன்னை விட எளியவன் அயலவன்
களத்தில் இறங்கி ஆடி வீசும் பந்து 
சுழன்று தன்னை வீழ்த்துவதை விட 
தாம் எளிதாய் களத்திலிறங்கி
அவுட் ஆகும் கோட்பாட்டில்
களத்தில் இறங்கி விட்டேன்!

எந்த இசத்தைச் சொன்னாலும்
மக்கள் தலை இசையாது!
இடமிருந்து வலம் நோக்கில்
எவரும் என்னை ஏற்காது!

காலியாக உள்ள மைதானத்தில்
எவரும் இறங்கி ஆடலாம்
வீசும் திசையில் பந்து இறங்கும்!
அது காகிதப் பூ பந்தா
கருங்கல்லில் வரைந்த பூவாவென 
மக்கள் முன் வீச பயமென்ன!

இறங்கி விட்டது

அயலவன் கொடுத்த மய்யம்!